Thursday, October 19, 2017

பின்னுரை



முடிவுரை என்று கூற இயலாது . ஏனென்றால் இது முடிவல்ல தொடக்கம்.!
ஒரு செயல் என்பதைப் பலன் எதிர் நோக்காமல் புரிவதே , இறைவனை அடைய எளிய வழி - கர்ம யோகம்-என்கிறது கீதை. எளிதாகத் தோன்றும் இது, வாழ்வில் கடைப் பிடிக்க மிகக் கடுமையானதாகும். பலனை அடையாமல் ஒரு காரியத்தை எப்படிச் செய்வது, அந்த பலனை எப்படி அர்ப்பணிப்பது என்பது   நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று.
“பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றுக அப்பற்று விடற்கு.”
பற்றை விடுவதற்கே ஒரு பற்றுக் கோடு தேவை. எனவே முதலில் இறைவனைப் பற்றிக்கொள்,பின் அந்த பற்றையும் விடு என்பதைப் போல், முதலில் செயல் பலனை அனுபவி. பிறகு செயலின் பலனை அர்ப்பணிக்கலாம். இப்படி இருந்தால் சுலபம் அல்லவா.?
அதற்கு முதலில் எப்படிப்பட்ட செயல்களின் பலனின் ஆசை வைத்து அனுபவிக்கலாம்?. என்பதைத் தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
இக லோக  விஷயச் செயல்களை பலன் எதிர் நோக்கிச் செய்தால் தான் அது திரும்ப மாயச் சுழலில் சிக்க வைக்கும்.  
பர லோக விஷயங்களில் பலன் நோக்கிச் செயல் புரியுங்கால் , அந்த பலன் ஏற்பட்டாலும், கெடுதியானதாகாது. நாம் எதிர்நோக்கும் பலனே பரமானந்தம் கொடுக்கும் ஞானம் என்றானால், அதில் ஊறு ஏது. ஒரே கல்லில்  இரண்டு மாங்காய்.
இறைவனைப் பற்றியேயுள்ள எந்த செயலிலும் ஆசையுடன், ஆத்ம திருப்தி என்ற பலனை மட்டும்எதிர்பார்த்து புரிந்தோமானால். போகப் போக அந்த ஆத்ம த்ருப்தி பரமாத்ம ப்ரீதியில் கொண்டு சேர்க்க , பலன் துறக்கும் பக்குவம் கிட்டும்.
செய்யும் செயலே பலனாக , நாம் நாளை கொள்ளப் போகும் யாத்திரையைப் பற்றியே எண்ணத்தையே, எழுத்தையே, பேச்சையே, அதற்கான ஏற்பாடுகளையே   ஒரு சாதனையாக, ஆத்ம திருப்தியை மட்டும் பலனாகக் கோரி புரிந்தோமானால், நமக்குத் பலன் துறக்கும் கஷ்டமும் இல்லை, பலன் நம்மைப் பற்றும் தோஷமும் இல்லை.  அந்த செயலே அதன் பலனாகி, அந்த ஆன்மீக எண்ணங்களே த்யானம் என்ற சாதனையாகி , நம்மைக் கடைத்தேற்றும் வழியில் கொண்டு சேர்க்கும் இது சத்தியம் . நம்புங்கள்…!  


க்ருஷ்ண க்ருஷ்ணா ..!





No comments:

Post a Comment