Thursday, October 19, 2017

கண்ணனே சரண்




ஒருமை கொள்ள இருமை விட்டு
*மூன்று வேளை பூஜைவிட்டு
நான்கு வேதக் கருவரிந்து
ஐந்து பூத உலகிருந்து
*ஆறுமாக நீர் பெருக்கி
எழுபிறப்பின் வினை அறுக்க
*எண்டிசையின் வெளித் துறந்து
ஒன்பது வாய் உடல் மறந்து
வித்திலா விதம் படுத்த
*பத்துமான கீத மன்னன்
சத்தியத்தின் அன்பு பாதம்
பணிந்திருநீ பாழ் மனமே
_______________

*மூன்று வேளை பூஜைவிட்டு
 தூல உலகின் பலன் கருதி,மூன்று வேளை மட்டும்,
பூஜை என்றில்லாமல் அனவ்ரதமும் இறை நினைவில் இருப்பது.

*ஆறுமாக நீர் பெருக்கி = பக்தியில் ஆறாக விழி நீர் சொரிந்து

*எண்டிசையின் வெளித் துறந்து = எண்டிசையிலான வெளியுலகைத் துறந்து,உள் நோக்கி இருந்து

*பத்துமான = தசாவதாரன்

 அருளிடுமா மாணிக்கமே 

அமுதக் கடல்கடைந்து *வாருணைத் துளிசுவைத்து
*சுமுகத்தின் சுகிர்தநிலை சிரச்சுடரால் தான்பெற்று
எழுத்தில் வடிக்கவொண்ணா *நறைகமழுன் பதம்பிடித்து
சுழுமுனையின் எழுவிசையை முயன்றெழுப்பும் சாதகத்தை
அணுவளவும் பழகாத நாயேனாம் கீழோனென்னை
கோபாலா இறையோனே மறவாதே மறுக்காதே
ஊழாலே சுழன்றழுகும் ஊனாலே உழல்கின்ற
கழுபிறப்பைப் போக்காயோ மனக்கதவைத் திறவாயோ
பொருளாலே கிடைக்காத விழுப்பொருளே திருவருளே
 அழுதிடவும் நீர்சுரக்கா கல்மனத்தின் மானிடன்நான்
தொழுதிடவும் அறிந்திலனே அருளிடுமா மாணிக்கமே
உனக்கிருக்கும் வேலையிலே எனக்கொதுக்கு ஓர்-கணமே  

சுமுக சுகிர்தநிலை = பேரமைதி பெருநிலை
*வாருணை = ஆனந்தக் கள்
*நறைகமழ் = இன்பம் அளிக்கும்




No comments:

Post a Comment