Thursday, October 19, 2017

யாத்திரைப் பாடல்கள்





விண்ணின்று பூமி மண்-வந்த ஸ்வாமி
பொன்னே-பொன் மணியே-நீ தானடா
கண்ணே-கண் மணியே-கண்  தூங்கடா
   (MUSIC)
பூவொன்று தானே நீ-கொண்ட நெஞ்சு
தீதொன்று உன்-அன்பில் தோன்றுமா
யாதொன்று வேறிங்கு வேண்டுமா
(MUSIC)
யது-வம்ச சோமா துஷ்-கம்ச பீமா
 கமனீய-தாமா சௌந்தர்ய-ஷ்யாமா
நந்தா ப்ரிய லால்  கோவிந்த கோபால்
வா-வா க்ருபாளா முரளீதரா-லால்
மனம்கவரும்... மாணிக்கமே...!
மனம்கவரும் மாணிக்கமே
நடந்து-வரும்.... நாட்டியமே...!
நடந்து-வரும் நாட்டியமே
விண்ணின்று விளையாட மண்வந்த சேயல்லவோ
ஜோஜோ.. ஜோஜோ.. ஜோஜோ.. ஜோஜோ..ஜோஜோ
(Short Music)
விண்ணின்று பூமி மண்-வந்த ஸ்வாமி
பொன்னே-பொன் மணியே-நீ தானடா
கண்ணே -கண் மணியே-கண்  தூங்கடா
(MUSIC)
பாம்பென்ற பாயில் துயில்கொண்ட  புவனா
தூங்காமல் தூங்கும் ஹே-சேஷ சயனா
அழகாக ஆலில் சிரிக்கின்ற கண்ணா
நீங்காமல் நெஞ்சில் நிறைகின்ற மன்னா
நீ-எழிலில்... மன்மதனா...!
நீ-எழிலில் மன்மதனா
அருள்வழங்கும்... என்சதனா..!
அருள்வழங்கும் என்சதனா
மண்வந்த சேயல்ல நீ-எங்கள்  தாயல்லவோ
ஜோஜோ.. ஜோஜோ.. ஜோஜோ.. ஜோஜோ ஜோஜோ
(Short Music)
விண்ணின்று பூமி மண்-வந்த ஸ்வாமி
பொன்னே-பொன் மணியே-நீ தானடா
கண்ணே -கண் மணியே-கண்  தூங்கடா
  பூவொன்று தானே நீ கொண்ட நெஞ்சு
தீதொன்று உன் அன்பில் தோன்றுமா
யாதொன்று வேறிங்கு வேண்டுமா

____________________________________

************


விண்ணகர்-தோற்..க-மண்மீ..தி..லோர்-நகர்
கண்ணனின் த்வா..ரகையே
புவிமீதிலே
(3)
விண்ணவர் வாழ்கின்ற..தாம்-அமராவதி (2)
இதற்கிணையாய்-அல்ல அதனினும் மேலடி (2)
தேவ-லோகமோ எனும்-த்வார..கா..புரி (2)
போலெது-கூறடி கண்டிடுவோம் வாடி (2)
விண்ணகர்-தோற்க மண்மீதி..லோர்-நகர்
கண்ணனின் த்வா..ரகையே
(MUSIC)
விதவித-மாளிகை மாடமும்-கூடமும் (2)
வேடிக்கை பார்க்க-யுகம் பலப்பல வாகிடும் (2)
விதவித-மாளிகை மாடமும்-கூடமும்
வேடிக்கை பார்க்க-யுகம் பலப்பல வாகிடும்
உலகம் முழுதும் இல்லை அதற்கிணை வேறெதும் (2)
 விரைவினில்-காண்போம் நாமும்-வா..யேன்-தோழி
விரைவினில்-காண்போம் நாமும்-வா..யேன் அதை (3)
விண்ணகர் தோற்க மண்மீதி..லோர் நகர்
கண்ணனின் த்வா..ரகையே 
(MUSIC)
முயன்று முயன்றவனை உத்தம-யோகியெல்லாம் (3)
உயரிய பெரியோரெலாம் கண்டிட யோகம் கொண்டார் (2)
முயன்று முயன்றவனை உத்தம-யோகியெல்லாம்
உயரிய பெரியோரெலாம் வந்திங்கு யோகம் கொண்டார்
அவர்குறை போக்க-வந்தான் த்வாரகை வாசம்-கொண்டான் (2)
இத்தலம்-தானே வந்தானே நின்றான் ஹரி
இத்தலம்-தானே வந்தானே தந்தான்  கதி 
விண்ணகர்-தோற்க மண்மீதி..லோர்-நகர் கண்ணனின் த்வா..ரகையே
(MUSIC)

அன்புக்குடம் உடைந்து ..
அன்புக்குடம் உடைந்து ஆறெனப் பாய்ந்து-வந்தான் (3)
தொடர்வினை மாயம்-நீக்கி உயர்ந்த-ப..தவி-தந்தான் (2)
அன்பைத் திரட்டி-மூங்கில் ஊதலில் தேன் சொரிந்தான்
அன்பைத் திரட்டி- ஊதிக் குழலிசையாகத் தந்தான்
அன்பைத் திரட்டி- ஊதிக் காதினில் தேன் சொரிந்தான்

அதற்கிணை ஏதோ அம்மா (3)
அது-என்..றோ-இனி
அதற்கிணை ஏதோ அம்மா அது-என்..றோ-இனி
விண்ணகர் தோற்க மண்மீதி..லோர் நகர்
கண்ணனின் த்வா..ரகையே..
புவிமீதிலே
தேவரும் போற்ற சிதானந்தம் மேவிட
இதற்கிணை..யாய்ச்-சொல்ல ஜகத்தினில் ஏதடி
தேவ லோகமோ எனும்-த்வார..கா..புரி
போலெது-கூறடி கண்டிடுவோம் வாடி

விண்ணகர்-தோற்க மண்மீதி..லோர்-நகர்
கண்ணனின் த்வா..ரகையே…

 ______________________________________________________________


*******

மனம்-கவர் பாடலை நாம்-பாடி நமைத் தந்திடுவோம்-வா கண்ணனிடம்
(1+SM+1)
இருகரம்-தூக்கிச் சரண்-என்போம் அந்தக் கண்ணனோ தன்னையே தந்திடுவான்
மனம்-கவர் பாடலை நாம்-பாடி நமைத் தந்திடுவோம்-வா கண்ணனிடம்
(MUSIC)
அவன்-முகம் கண்டே-பே..ரின்ப-நிலை
கொள்ள மண்ணிலே செய்து-நின்றான் மாயங்களை
என்னிடம் வாவென்று முக்தி-நிலை தந்து நம்மை-ஆட் கொள்ளுவான் ஐயமிலை
ஓ …. ஓ ..
மனம்-கவர் பாடலை நாம்-பாடி நமைத் தந்திடுவோம் வா கண்ணனிடம்
(MUSIC)
விண்ணகர் மேலோர் பொன்னக ரே அந்த கண்ணனும் செய்தநல் த்வாரகை யே
அந்த இடம்-நாம் தேடிச் செல்வோம்
அந்த நாயகன் மேன்மையைப் பாடிச் சொல்வோம்
மனம்-கவர் பாடலை நாம்-பாடி நமைத் தந்திடுவோம் வா கண்ணனிடம்
 ______________________________________________________________

************


ஐயமில்லை என்ன-பாக்குறீங்க
கண்ணன் பையனில்லை ஆண்டவனே-தாங்க
அவன் கம்சனோடு மோதிக் கொன்னுட்டாங்க -
இது பையனால ஆகுமாங்க-ஏங்க ?
கம்சனோடு மோதிக் கொன்னுட்டாங்க -
இது பைய்யானால ஆகுமாங்க ஏங்க ?
ஐயமில்லை.. சிறு ஐயமில்லை.. துளி ஐயமில்லை..-
என்ன-பாக்குறீங்க
  கண்ணன் பையனில்லை ஆண்டவனே-தாங்க
தேவகி-பாலனாய் ராதா-லோலனாய் வந்ததால் ஒரே ஐயமா
பூமுகம்-கொண்டதால் பார்வையில்-சின்னதாய் நின்னதால் சிறு பையனா
கோகுலபாலனே அந்த-மாலே என-வ்யாஸமாமுனி கூறினாரே
ஐயமில்லை.. சிறு ஐயமில்லை.. துளி ஐயமில்லை..-
என்ன-பாக்குறீங்க
  கண்ணன் பையனில்லை ஆண்டவனே-தாங்க
காளிய-ஆட்டமும் பாம்பு-தன் ஓட்டமும் ஆகுமா ஐயா பையனால்
மாபெரும் மலையை-யார் விரலாலே தூக்கினார் கூறய்யா  பதில் கூறய்யா
நீ-தான் பைத்தியம் அறிந்திடாயோ அவன்-தான் வைத்தியம் புரிந்திடாயோ
நீ-ஓர் பைத்தியம் மாறிடாயோ அவன்-பேர் வைத்தியம் கூறிடாயோ
ஐயமில்லை.. சிறு ஐயமில்லை.. துளி ஐயமில்லை..-
என்ன-பாக்குறீங்க
  கண்ணன் பையனில்லை ஆண்டவனே-தாங்க (2)
கண்ணன் பையனில்லை கும்பிடலாம் வாங்க

ப்ருந்தாவன் விஹாரி லால்கி - ஜெய்





கண்ணனே சரண்




ஒருமை கொள்ள இருமை விட்டு
*மூன்று வேளை பூஜைவிட்டு
நான்கு வேதக் கருவரிந்து
ஐந்து பூத உலகிருந்து
*ஆறுமாக நீர் பெருக்கி
எழுபிறப்பின் வினை அறுக்க
*எண்டிசையின் வெளித் துறந்து
ஒன்பது வாய் உடல் மறந்து
வித்திலா விதம் படுத்த
*பத்துமான கீத மன்னன்
சத்தியத்தின் அன்பு பாதம்
பணிந்திருநீ பாழ் மனமே
_______________

*மூன்று வேளை பூஜைவிட்டு
 தூல உலகின் பலன் கருதி,மூன்று வேளை மட்டும்,
பூஜை என்றில்லாமல் அனவ்ரதமும் இறை நினைவில் இருப்பது.

*ஆறுமாக நீர் பெருக்கி = பக்தியில் ஆறாக விழி நீர் சொரிந்து

*எண்டிசையின் வெளித் துறந்து = எண்டிசையிலான வெளியுலகைத் துறந்து,உள் நோக்கி இருந்து

*பத்துமான = தசாவதாரன்

 அருளிடுமா மாணிக்கமே 

அமுதக் கடல்கடைந்து *வாருணைத் துளிசுவைத்து
*சுமுகத்தின் சுகிர்தநிலை சிரச்சுடரால் தான்பெற்று
எழுத்தில் வடிக்கவொண்ணா *நறைகமழுன் பதம்பிடித்து
சுழுமுனையின் எழுவிசையை முயன்றெழுப்பும் சாதகத்தை
அணுவளவும் பழகாத நாயேனாம் கீழோனென்னை
கோபாலா இறையோனே மறவாதே மறுக்காதே
ஊழாலே சுழன்றழுகும் ஊனாலே உழல்கின்ற
கழுபிறப்பைப் போக்காயோ மனக்கதவைத் திறவாயோ
பொருளாலே கிடைக்காத விழுப்பொருளே திருவருளே
 அழுதிடவும் நீர்சுரக்கா கல்மனத்தின் மானிடன்நான்
தொழுதிடவும் அறிந்திலனே அருளிடுமா மாணிக்கமே
உனக்கிருக்கும் வேலையிலே எனக்கொதுக்கு ஓர்-கணமே  

சுமுக சுகிர்தநிலை = பேரமைதி பெருநிலை
*வாருணை = ஆனந்தக் கள்
*நறைகமழ் = இன்பம் அளிக்கும்




பின்னுரை



முடிவுரை என்று கூற இயலாது . ஏனென்றால் இது முடிவல்ல தொடக்கம்.!
ஒரு செயல் என்பதைப் பலன் எதிர் நோக்காமல் புரிவதே , இறைவனை அடைய எளிய வழி - கர்ம யோகம்-என்கிறது கீதை. எளிதாகத் தோன்றும் இது, வாழ்வில் கடைப் பிடிக்க மிகக் கடுமையானதாகும். பலனை அடையாமல் ஒரு காரியத்தை எப்படிச் செய்வது, அந்த பலனை எப்படி அர்ப்பணிப்பது என்பது   நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று.
“பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றுக அப்பற்று விடற்கு.”
பற்றை விடுவதற்கே ஒரு பற்றுக் கோடு தேவை. எனவே முதலில் இறைவனைப் பற்றிக்கொள்,பின் அந்த பற்றையும் விடு என்பதைப் போல், முதலில் செயல் பலனை அனுபவி. பிறகு செயலின் பலனை அர்ப்பணிக்கலாம். இப்படி இருந்தால் சுலபம் அல்லவா.?
அதற்கு முதலில் எப்படிப்பட்ட செயல்களின் பலனின் ஆசை வைத்து அனுபவிக்கலாம்?. என்பதைத் தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
இக லோக  விஷயச் செயல்களை பலன் எதிர் நோக்கிச் செய்தால் தான் அது திரும்ப மாயச் சுழலில் சிக்க வைக்கும்.  
பர லோக விஷயங்களில் பலன் நோக்கிச் செயல் புரியுங்கால் , அந்த பலன் ஏற்பட்டாலும், கெடுதியானதாகாது. நாம் எதிர்நோக்கும் பலனே பரமானந்தம் கொடுக்கும் ஞானம் என்றானால், அதில் ஊறு ஏது. ஒரே கல்லில்  இரண்டு மாங்காய்.
இறைவனைப் பற்றியேயுள்ள எந்த செயலிலும் ஆசையுடன், ஆத்ம திருப்தி என்ற பலனை மட்டும்எதிர்பார்த்து புரிந்தோமானால். போகப் போக அந்த ஆத்ம த்ருப்தி பரமாத்ம ப்ரீதியில் கொண்டு சேர்க்க , பலன் துறக்கும் பக்குவம் கிட்டும்.
செய்யும் செயலே பலனாக , நாம் நாளை கொள்ளப் போகும் யாத்திரையைப் பற்றியே எண்ணத்தையே, எழுத்தையே, பேச்சையே, அதற்கான ஏற்பாடுகளையே   ஒரு சாதனையாக, ஆத்ம திருப்தியை மட்டும் பலனாகக் கோரி புரிந்தோமானால், நமக்குத் பலன் துறக்கும் கஷ்டமும் இல்லை, பலன் நம்மைப் பற்றும் தோஷமும் இல்லை.  அந்த செயலே அதன் பலனாகி, அந்த ஆன்மீக எண்ணங்களே த்யானம் என்ற சாதனையாகி , நம்மைக் கடைத்தேற்றும் வழியில் கொண்டு சேர்க்கும் இது சத்தியம் . நம்புங்கள்…!  


க்ருஷ்ண க்ருஷ்ணா ..!





நாத துவாரகா


இது ராஜஸ்தானில்(உதய்ப்பூருக்கு அருகில் (48 கி மீ ) உள்ள ஸ்தலமாகும். இந்த தலத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் உள்ள கோவர்தன க்ருஷ்ணன் சிலை,இஸ்லாமிய மன்னன் ஒளரங்கசீப்பின் காலத்தில், அவனது இந்து தர்ம எதிர்ப்பின் பயத்தில்,, மதுராவிலிருந்து எடுத்துவரப்பட்டதாகும்.
இந்த கோவில் கிருஷ்ணரின் தந்தை நந்தகோபரின் வீடு போலக் கட்டப்பட்டதால் நந்த பவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
நந்தகோபர் வீட்டில் இருந்தது போல் , ஒவ்வொன்றிற்கும் ஒரு அறை என்று அமைந்திருக்கிறது.
பால் , தயிர் வைத்திருக்க பால் அறை,பூக்களை வைக்க பூ அறை, நகை அறை ,கஜானா அறை .. என்று பல அறைகளைக் கொண்டது போல் அமைந்த இந்தக் கோவில் அரண்மனையில் , ஸ்ரீ.கிருஷ்ணன் தான் இளவரசன்.
வெளியில் சென்று வர கண்ணன் வீட்டில் உள்ளது போல் ஒரு ரதமும் உண்டு.

கோவில் வளாகத்தினுள்ளே காமிரா அனுமதி இலலை. எனவே வெளியில் உள்ள அழகான கடைத் தெருவில் சற்று உலாவலாம் வாருங்கள் 


















இன்னும் நிறைய படங்கள் உள்ளன.